பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட எந்த அந்நியப் படைகளையும் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மக்களின் நலன்களைக் கருதி பாகிஸ்தான் பின்பற்றி வரும் கொள்கைகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்றும் அரசு உறுதியளித்துள்ளது.
காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கப் படைகள் தங்கள் நாட்டிற்குள் வந்து செல்வதில் தவறில்லை என்றும் பாகிஸ்தான் அதிபர் ஆஷிப் அலி ஜர்தாரி அமெரிக்காவில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஷெரி ரஹ்மான், "அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய நாட்டுப் படைகள் பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகளைத் தாக்கலாம் என்று அதிபர் சொல்லவில்லை" என்றார்.
இதேபோல காஷ்மீரிகளுக்கு உள்ள சுய- ஆட்சி உரிமைகளுக்கு ஆதரவளிப்பதிலும் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்றார் அவர்.