அணு சக்தி விடயத்தில் பாகிஸ்தான் பாரபட்சமாக நடத்தப்பட்டாலும் கூட, இந்தியா- அமெரிக்கா இடையிலான சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்துத் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கோரும் தீர்மான வரைவில் அக்டோபர் 8 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட உள்ளார்.
இது பற்றி, நியூயார்க்கில் வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள ஜர்தாரி, "உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒன்று உலகிலேயே மிகப் பழமையான ஜனநாயக நாட்டுடன் நட்புறவு கொள்வது பற்றி நாங்கள் ஏன் அதிருப்தியடைய வேண்டும்" என்றார்.
அணு சக்தி விடயத்தில் பாகிஸ்தான் பாரபட்சமாக நடத்தப்பட்டாலும் கூட இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவுடன் மேற்கொண்டுள்ளதைப் போன்ற சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை தங்களுடனும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதற்கு அமெரிக்கா தரப்பில் எந்தவிதமான சாதகமான பதிலும் தரப்படவில்லை.