அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கோரும் தீர்மான வரைவில் வருகிற புதன்கிழமை கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் பெர்மான், அண்மையில் தன்னுடைய நிலையை மாற்றி சம்மதித்துள்ள நிலையில், அக்டோபர் 8 (புதன்கிழமை) அன்று வரைவில் (H R 7081) புஷ் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளை மாளிகை அனுப்பியுள்ள அழைப்பில், "இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கோரும் தீர்மான வரைவு (H R 7081) மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் சட்டம் ஆகியவற்றில் கையெழுத்திட புஷ் உங்களை வரவேற்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு கடந்த மாதம் 28ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்)யும், கடந்த 2ஆம் தேதி செனட் சபையும் ஒப்புதல் அளித்தன.