அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை இணைந்து நடத்துதல், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பறிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவித்தல் ஆகியவை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த வாரத் துவக்கத்தில் டெல்லியில் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளும் தங்களின் தேசியச் சட்டங்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அறிவியல், தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் ஆவணங்கள், வல்லுநர்கள், ஆராய்ச்சிப் பணியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்று அரசின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.
பரிமாற்ற அடிப்படையில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயிற்சி தரவும், கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், அதன் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுதல், கூட்டாக ஆராய்ச்சிகளை திட்டமிடுதல் ஆகியவை உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் உள்ள அறிவியல், தொழில்நுட்ப சவால்களைக் கூட்டாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இந்த ஒப்பந்தம் வழிகோலுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் இணைந்து செயல்படுதல், விர்ச்சுவல் சார்க் (தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாடு) தொழில்நுட்பத் தகவல் இணையப் பல்கலைத் தளத்தை (virtual SAARC technology information web portal) அமைத்தல் ஆகியவை மூலம் 2008- 2013 ஆம் ஆண்டுகளில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் மண்டல ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் சார்க் நாடுகளின் அமைச்சர்கள் கடந்த மாதம் டெல்லியில் முதல் முறையாகக் கூடி விவாதித்தனர்.