Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பம்லாவில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு!

Advertiesment
பம்லாவில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு!
, சனி, 4 அக்டோபர் 2008 (12:46 IST)
ராணுவத் துறையில் இருநாடுகளும் மேற்கொள்ளும் கூட்டு நடவடிக்கையில் ஒருபகுதியாக இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசத்தின் பம்லா (Bum La) பகுதியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சந்திப்பு நடத்தியுள்ளனர்.

சீனாவின் 59வது தேசிய தினத்தை (அக். 1) முன்னிட்டு கமீங் பகுதியில் உள்ள சீனப் படையினர், இந்திய படையினருக்கு விடுத்த அழைப்பை ஏற்று அருணாச்சலப் பிரதேசத்தின் டவாங் மாவட்டத்தில் உள்ள பம்லாவில் இருநாட்டு எல்லைப் பகுதி ராணுவ அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

ஆசியாவின் இரு பெரும் சக்திகளாக வளர்ந்து வரும் இந்தியாவும், சீனாவும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தி வருகின்றன. சிக்கிம் மாநிலத்தின் நாதுலா பகுதியிலும் இந்த சந்திப்புகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன.

இந்திய ராணுவ குழுவுக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் அசோக் அம்ப்ரி இதுகுறித்து பேசுகையில், எல்லைப்பகுதியில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் அப்பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்படுத்த இதுபோன்ற சந்திப்புகள் அத்தியாவசியமானது என்றார்.

இருநாட்டு ராணுவத்தினர் இடையே துவங்கிய முதற்கட்ட சந்திப்புகள், கடந்த 1999ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் சந்திப்பாக மாறியது. அன்று முதல் இது வழக்கமான நிகழ்வாகவே நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இந்திய சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மெய்ட்ரீ ஸ்தால் பகுதியில் இந்திய ராணுவக் குழு நடந்திய நிகழ்ச்சியில், சீன அதிகாரிகள் பங்கேற்றதாக தெரிவித்த அசோக் அம்ப்ரி, இதுபோன்ற சந்திப்புகள் இருநாட்டு ராணுவத்திடையே பரஸ்பர நம்பிக்கை, நட்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

இந்தியர்களின் சுதந்திரதின அழைப்பை ஏற்றுக் கொண்ட சீனர்கள், தற்போது அவர்களின் தேசிய தினத்தன்று இந்திய ராணுவ அதிகாரிகள் குழுவுக்கு அழைப்பு விடுத்து தங்களின் நட்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்றார்.

பம்லாவில் நடந்த நிகழ்ச்சியில், சீனக் குழுவுக்கு தலைமை தாங்கிய கலோனல் ஷெங்-சு- செங், இந்திய அதிகாரிகளை வரவேற்றார். பின்னர் கொடியேற்றப்பட்டு, இரு நாடுகளிடையே உள்ள தன்னம்பிக்கை, நம்பிக்கையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது எல்லைப் பகுதியில் அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இரு தரப்பினரும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததாகவும் அம்ப்ரி கூறியுள்ளார்.

இச்சந்திப்பில், சீனர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பின்னர் சீனர்களின் பிரபல உணவு வகைகள் வழங்கப்பட்டதுடன், இரு தரப்பினரும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொண்டனர். இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தத்தமது நாட்டு ரூபாய் நோட்டுகளை பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil