இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தை போன்றதொரு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா பாகிஸ்தானுடன் தற்போது மேற்கொள்ளாது என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மெக்கார்மார்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியா உடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது, அந்நாட்டின் நீண்ட கால நன்நடவடிக்கை மற்றும் அதன் மீது அமெரிக்காவுக்கு உள்ள மரியாதை காரணமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவுடன் மேற்கொண்டது போன்றதொரு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, பாகிஸ்தானுடன் அமெரிக்கா தற்போதைய சூழலில் செய்து கொள்வது குறித்து என்னிடம் தகவல் இல்லை என்றார்.
அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் உடனான சமீபத்திய சந்திப்பின் போதுதான் பாகிஸ்தான் அதுகுறித்து தங்களிடம் வலியுறுத்தியது என்றாலும், அதற்கு முன்பாகவே இதுகுறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியதை மெக்கார்மார்க் சுட்டிக்காட்டினார்.
அப்போதும் இதற்கு நான் பதிலளித்துள்ளேன். எனவே, அப்போதும் சரி, இப்போதும் சரி அமெரிக்காவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனக் மெக்கார்மார்க் கூறினார்.