இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 86 உறுப்பினர்களும், எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிபர் புஷ் அரசு முழு வீச்சில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பயனாக இந்த ஒப்பந்தத்திற்கு முதலில் அமெரிக்க செனட் சபையின் முக்கிய குழுவான வெளியுறவுக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்த ஒப்பந்தம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் பெறப்பட்ட 4 நாட்கள் கழித்து செனட் சபையில் நேற்று இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 86 உறுப்பினர்களும், எதிர்த்து 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அமெரிக்காவின் அணு எரிபொருள் விநியோகமானது இந்தியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு உதவாது என்பதை வலியுறுத்தி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களை செனட் சபை நிராகரித்துவிட்டது.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரு சபைகளும் ஒப்புதல் அளித்துவிட்டதை தொடர்ந்து இதன் இறுதி வடிவத்தில் இருநாட்டு தலைவர்களும் விரைவில் கையெழுத்திட உள்ளனர். இதற்காக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் விரைவில் இந்தியா வர உள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் அமெரிக்காவின் சார்பில் அதன் அயலுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைசும், இந்தியாவின் சார்பில் மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கையெழுத்திடுவார்கள்.