பிரதமர் சிறப்பு விமானம்: அணு சக்தி ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற இடதுசாரிக் கட்சிகள், எதிர்காலத்தில் மீண்டும் கூட்டணியில் இணைவார்களா என்பது பற்றி கூறுவதற்கு நான் ஜோதிடர் அல்ல என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கான அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சிறப்பு விமானத்தில் நாடு திரும்பிய பிரதமர் விமானத்திலேயே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், இடதுசாரிக் கட்சியினர் எதிர்காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அதை இப்போதே கூற தான் ஜோதிடர் அல்ல என்று பதிலளித்தார். எனினும் காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம் நாட்டின் நலனுக்காவே என்று இடதுசாரிகளுக்கு புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கையை தாம் இன்னும் இழக்கவில்லை என்றார்.
அணு சக்தி ஒப்பந்தத்தால் நாட்டின் நலன் பாதிக்கப்படாது என்பதால், இடதுசாரிக் கட்சிகளோ, பா.ஜ.க.வோ இதனை ஆட்சேபிக்கும் வகையில் பார்க்க வேண்டியதில்லை என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
தேசிய அளவிலான பிரச்சனைகளை சமாளிக்க தாங்கள் பெற்ற அறிவுடைமை, அனுபவம் உள்ளிட்டவற்றை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வெளிப்படுத்தி தீர்க்க வேண்டும். இது பா.ஜ.க.வுக்கும் பொருந்தும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் பொருந்து, பிற அரசியல் கட்சிகளுக்கும் பொருந்து என்றும் பிரதமர் கூறியுள்ளார்.