பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி பைதுல்லா மசூத் இன்று காலை மரணமடைந்ததாக வெளியான செய்தியை அந்த இயக்கம் மறுத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கு மூளையாக செயல்பட்ட மசூத் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு நோயின் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
நேற்றிரவு சுமார் ஒரு மணியளவில் அவரது நிலை மிகவும் மோசமடைந்ததால், மசூத் மரணமடைந்ததாக 'டான்' தனியார் தொலைக்காட்சியும், இஸ்லாமாபாத்தில் வெளியாகும் சில பத்திரிகைககளும் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் தலிபான் தீவிரவாத இயக்கம் அதனை மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் முஸ்லிம் கான், இது பாகிஸ்தான் அரசின் பொய்ப் பிரச்சாரம் எனக் கூறினார்.
பைதுல்லா மசூத் இறந்ததாக வெளியான தகவலை உறுதி செய்ய முடியவில்லை என அமெரிக்காவின் பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.