பாகிஸ்தானில் சமீபத்தில் மரியாட் நட்சத்திர ஓட்டலில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் போன்று பெஷாவர் நகரிலும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலை பயங்கரவாதிகள் 2 பேரை பாகிஸ்தான் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
வடமேற்கு எல்லைப்புற மாகாணமான பெஷாவரில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனத்தில் பெஷாவர் நோக்கி வந்து கொண்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய ராணுவத்தினர் ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பழங்குடியினப் பகுதியில் அந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 2 பயங்கரவாதிகள் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தினரின் இந்த அதிரடித் தாக்குதலால், பெஷாவர் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது. மேலும் பயங்கரவாதிகளிடமிருந்து 2,000 கிலோ கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து பழங்குடியினப் பகுதியில் இருந்து பெஷாவர் நகருக்கு வரும் நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மரியாட் 5 நட்சத்திர ஓட்டலின் வாசலின் மீது வெடிப்பொருட்கள் ஏற்றி வந்த வாகனத்துடன் வந்து தற்கொலை பயங்கரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.