இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது!
இதனையடுத்து, இந்தியாவிற்கு அணு தொழில்நுட்பத்தை விற்க விதிக்கப்பட்டிருந்த தடை 34 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குப் பின்னர் இன்று அதிகாலை (இந்திய நேரடிப்படி) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒப்பந்தத்திற்கு ஆதவாக 298 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் பதிவாகின. மொத்த வாக்கில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றதால், ஒப்பந்தம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலுக்கு ஒப்பந்தம் அனுப்பப்ட்டுள்ளது. செனட் சபையிலும் நிறைவேறிய பிறகு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டில் இந்தியா வரும் காண்டலிசா ரைஸ் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், செனட் சபையின் ஒப்புதலைப் பெறுவதில் சிரமம் இருக்காது என்று கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதிபர் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.