பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தியா- அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று பிரதமர் மன்மோகன் சிங்- அமெரிக்க அதிபர் புஷ் இடையே கையெழுத்தாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு கையெழுத்தானால் அது பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்நாளில் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசாக இருந்திருக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகாததால் பிரதமர் மன்மோகன் சிங் இந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்தியாவின் 14-வது பிரதமரான மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி பிறந்தார். அப்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரியாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆளுநர் பர்னாலா உள்பட தலைவர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.