அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். ஆனால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின் முழு ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகாமல் உள்ளது.
நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் வந்த மன்மோகன் சிங், நேற்று அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் புஷ்ஷுடன் கையெழுத்திடுவார் என்று இந்திய தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இன்னமும் சட்ட மசோதாவாக்கவில்லை என்பதால் கையெழுத்திட முடியவில்லை.
இன்று அதிகாலை 2.40 மணியளவில் மன்மோகன்- புஷ் சந்திப்பு இடம்பெறுவதாயிருந்தது. ஆனால் அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க நிதி நெருக்கடி விவாதக் கூட்டத்திலிருந்து திரும்ப காலதாமதமானதால் 20 நிமிடங்களுக்கு பிறகே இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
இரு தலைவர்களும் ஒப்பந்தத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து 40 நிமிடம் விவாதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்ஃபோர்ட், அணு சச்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கான அறிகுறி இந்த சந்திப்பில் இல்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.
"அமெரிக்க காங்கிரஸ் எப்போது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை" என்றார் முல்ஃபோர்ட். ஆனால் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் நம்பிக்கையான அறிகுறிகளையே காட்டி வருவதாக முல்ஃபோர்ட் தெரிவித்தார்.