Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆபத்து: ஜார்ஜ் புஷ்!

அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆபத்து: ஜார்ஜ் புஷ்!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (13:05 IST)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எடுக்காவிட்டால், அடுத்தடுத்து ஏற்படும் பொருளாதாரச் சரிவால் அமெரிக்கா நிலைகுலைந்து போகும் என அந்நாட்டு அதிபர் புஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்த புஷ், அமெரிக்க நாடாளுமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், நிதி நெருக்கடியும் அதையடுத்து மீள முடியாத பொருளாதார சரிவும் ஏற்படுவது நிச்சயம் எனக் கூறியுள்ளார்.

எனவே, அதுபோன்ற ஒரு நிதி நெருக்கடி சூழல் ஏற்படாமல் நாம் தடுக்க வேண்டும் என்றும், நிதி நெருக்கடியிலிருந்து மீட்க அரசு அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான லீமென் பிரதர்ஸ் திவாலானதும், நிதி நெருக்கடியில் சிக்கிய மற்றொரு முன்னணி வங்கியான மெரில் லின்ச்சை அமெரிக்க வங்கி விலைக்கு வாங்கியதாலும் அமெரிக்க பொருளாதாரம் நிலைகுலைந்து. அந்நாட்டு பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மேலும், உலகின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான அமெரிக்க இண்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி) திவாலாவதைத் தடுக்க அமெரிக்க அரசு 85 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன்= 100 கோடி) நிதியை கடனாக அளித்துள்ளது.

இதையடுத்து அமெரிக்க நிதி நெருக்கடி மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படும் நிலையில், நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை மீட்க அமெரிக்க அரசு மாபெரும் நிதி உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 70 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டத்தை அமெரிக்க அதிபர் புஷ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆனால் இத்திட்டம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய புஷ், அமெரிக்க பொருளாதாரத்தின் ஆபத்தான நிலையை குறிப்பிட்டு உடனடியாக உதவ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

தற்போது இவ்விஷயத்தில் தலையிட்டு அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் நிலை குலைந்து போய்விடும் என்று கூறிய புஷ், நாட்டு மக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதியுதவித் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட தவறான முடிவுகள் மற்றும் முதலீடுகளால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடுவதில் தமக்கு உடன்பாடில்லை என்றாலும், தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் மேலும் பல வங்கிகள் மூடப்பட்டு, காப்பீட்டு மற்றும் ஓய்வூதியத் தொகை பாதிப்புக்குள்ளாகி லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படுவதை தடுக்க இந்த நிதியுதவி அவசியம் என்றும் தனது உரையில் அதிபர் புஷ் கூறியுள்ளார்.

இத்திட்டம் குறித்து விவாதிக்க குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர்களான ஒபாமா மற்றும் மெக்கெய்னை சந்தித்து பேசவும் புஷ் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil