இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் இன்று நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ள நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்பாக அணு சக்தி ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதால், புஷ் உடனான சந்திப்பிற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் அணு சக்தி ஒப்பந்தம் இடம்பெறும் என்றாலும், அது முதல் விவாதமாக எடுத்துக் கொள்ளப்படுமா என்பது சந்தேகமே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று நடந்த அமெரிக்க செனட் சபை கூட்டத்தில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அயலுறவு விவகாரங்களுக்கான செனட் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற இரு அவைகளிலும் போதுமான ஆதரவு உள்ளதாக புஷ் அரசு நேற்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.