பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது முதல் சந்திப்பை மேற்கொண்ட பாகிஸ்தான் புதிய அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நியூயார்க்கில் தான் தங்கியுள்ள மில்லேனியம் ஓட்டலில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியைச் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து பேசியதாக தெரிகிறது. அப்போது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி பிரதமர் மன்மோகன் சிங்கை 'நவீன இந்தியாவின் சிற்பி' என்று அழைத்தார்.
மேலும், தாங்கள் அனைவரும் விரும்பும் பிரதமராக உள்ளீர்கள் என்றும் இந்தியாவின் முன்னேற்றத்தில் உங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றும் ஜர்தாரி குறிப்பிட்டார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இரு தலைவர்களின் சந்திப்பு பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சுமூகமாகவும், பயனுள்ளதாகவும், நட்பு ரீதியாகவும் இருந்ததாகவும் இந்த சந்திப்பு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மன நிறைவை அளித்ததாகவும் கூறினார்.