ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பையும், ஜி-8 நாடுகள் அமைப்பையும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரான்ஸ், ஜி-8 நாடுகள் அமைப்பில் இந்தியா, சீனாவையும் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க்கில் நடந்து வரும் 63வது ஐ.நா பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, தற்போதைய வல்லரசுகளுடன் எதிர்கால வல்லரசுகளும் ஒருங்கிணைந்து தோளோடு தோள் சேர்த்து செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு கூட்டமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையை இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதுடன், ஜி-8 அமைப்பில் இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, பிரேஸில் ஆகிய நாடுகளை இணைத்து அதனை ஜி-13 அல்லது ஜி-14 என்ற அமைப்பாக மாற்ற வேண்டும் என்றார்.
ஜி-8 அமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.