இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக, நேற்று நடந்த அமெரிக்க செனட் சபையின் கூட்டத்தில், அயலுறவு விவகாரங்களுக்கான செனட் குழு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், அதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக அனுப்பியது.
இதன் காரணமாக இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அணு சக்தி ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறத் அந்நாட்டின் இரு அவைகளிலும் போதுமான ஆதரவு உள்ளதாக புஷ் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் நாளை அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கிறார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அந்நாட்டு நாடாளுமன்றம் இன்றைக்குள் ஒப்புதல் அளித்தால், அந்த ஒப்பந்தத்தில் மன்மோகன், ஜார்ஜ் புஷ் இருவரும் நாளை கையெழுத்திடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.