பின்லாந்தின் கவுஹஜோகியில் உள்ள வர்த்தக பள்ளியில் பயின்ற மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுஹஜோகி காவல்துறை தலைவர் உர்போ லின்டாலா, வர்த்தக பள்ளியைச் சேர்ந்த 20 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதே பள்ளியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர் என்றார்.
பின்னர் பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவன், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது எனக் கூறினார்.
கடந்தாண்டு ஹெல்சின்கியின் வடக்கு பகுதியில் உள்ள ஜோகிலாவில், 18 வயது மாணவர் பீக்கா-எரிக் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் தலைமை ஆசிரியை உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.