இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வர்த்தகக் சபை வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னாட்டு அணு சக்தி முகமை (IAEA) சார்பில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் அணு சக்தி வணிகத்தில் ஈடுபட்டு வந்தாலும், இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்காமல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுடன் இதுபோன்ற வணிகத்தை மேற்கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இந்தியாவை சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை நடவடிக்கையுடன் ஒருங்கிணைப்பதுடன், அந்நாட்டின் ஆக்கப்பூர்வ பணிகளுக்கான அணு ஆயுதத் திட்டங்களுக்கும் மிகுந்த பாதுகாப்பைப் பெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு சக்தி தொழில்நுட்பத்தில் கடந்த 34 ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியா, இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச நாடுகளுடன் இணைந்துள்ளதாகவும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுடன் வணிகம் மேற்கொள்ள இத்தருணத்தில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதால், அதனை பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதியளிப்பது அவசியம் என அமெரிக்க வர்த்தக சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.