சீனாவில் கலப்பட பால் பவுடரை ஏராளமான குழந்தைகள் உட்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 53 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மேலும், நாட்டின் உணவுப்பொருள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே பெரும் பரபரப்பை பால்பவுடர் விவகாரம் ஏற்படுத்தியுள்ளதால், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன அரசு உறுதியளித்துள்ளது.
நியூசிலாந்தின் ஜெய்ன்ட் பான்டெரா கூட்டுறவு நிறுவனம், சீனாவின் ஹபய் மாகாணத்தில் சன்லூ குழுமம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பால்பவுடர் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இதில் கடந்த 6ஆம் தேதிக்கு முன்பாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்ட பால்பவுடர்களில் மெலமைன் (Melamine) என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 700 டன் அளவிலான பால்பவுடர் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
ஆனால், இந்த பால்பவுடரை உட்கொண்ட சீனக் குழந்தைகளுக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த சனிக்கிழமை வரை 6,200 குழந்தைகள் மட்டுமே கலப்பட பால்பவுடரால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நேற்றிரவு அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் 53 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவற்றில் 12,892 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 39,965 குழந்தைகள் புற நோயாளிகளாக சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 80 சதவீதம் குழந்தைகள் 2 வயதிற்கு குறைவானவர்கள்.
கலப்பட பால் பவுடர் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என சீன அரசு அறிவித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அந்நாட்டில் பால்பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீன அரசு, குழந்தைகளுக்கான பால்பவுடர் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் சிசிஜயாஸ்சுவான் நகரில் கலப்பட பால்பவுடருக்கு விற்பனை அனுமதி வழங்கியது, அவற்றை உடனடியாக தடை செய்யாதது போன்ற காரணங்களுக்காக அந்நகரின் மேயர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.