சீனாவின் தெற்கு மாகாணமான குங்டாங்கில் உள்ள நடன விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 88 பேர் படுகாயமடைந்தனர்.
சென்ஜென் என்ற நகரத்தில் உள்ள இந்த நடன விடுதியின் மூன்றாவது தளத்தில் நடந்த நடன நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கானவர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். எனினும் இந்த விபத்தில் சிக்கி 43 பேர் உடல் கருகி பலியானார்கள். நெரிசலில் சிக்கி 88 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களும், மீட்பு குழுவினரும் விரைந்து வந்து தீக்காயங்களுடன் அலறித் துடித்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிகழ்ச்சியைக் காணவந்தவர்கள். இவர்களில் 51 பேரைத் தவிர மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.