Publish Date: Sat, 20 Sep 2008 (14:37 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (14:36 IST)
பாகிஸ்தானில், வாகனத்தில் வெடிபொருட்களை நிரப்பி வந்த தற்கொலைத் தீவிரவாதி, அதை ராணுவ வாகனத்தின் மீது மோதச் செய்ததில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர்.
வடமேற்கு எல்லைப்புற மாகாணமான பண்ணு என்ற இடத்திலிருந்து வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியான மிரன்ஷா என்ற இடம் நோக்கி 30க்கும் மேற்பட்ட ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலைத் தீவிரவாதி, ராணுவ வாகனம் மீது வேகமாக மோதினான். இதில் ராணுவ வாகனம் வெடித்துச் சிதறியது.
மிரன்ஷாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, பண்ணு - மிரன்ஷா சாலை மூடப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வசிரிஸ்தான் பகுதியில் பைதுல்லா மசூத் தலைமையிலான பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.