கான்பரா: சிறிலங்கப் படையின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு சிறிலங்க அரசிற்கு ஆஸ்ட்ரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பும், அதற்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் சார்பில் கான்பராவில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பும், அதற்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த புதன்கிழமை காலை நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பு திரண்ட தமிழர்கள், இலங்கையில் தங்களின் உறவுகளுக்கு எதிராக சிறிலங்க அரசு மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைளை நிறுத்தக்கோரும் முழக்கங்கள் எழுதிய பதாகைகளைக் கைகளில் வைத்திருந்தனர்.
நாடாளுமன்றத்தில் நடந்த முக்கியமான அமர்விற்கு இடையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள் ஆகியோர் நேரம் ஒதுக்கி தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ஆஸ்ட்ரேலிய பிரதமர், அயலுறவு அமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரிடம் தனித்தனியாக மனுக்கள் வழங்கப்பட்டன.
இந்த மனுவில், "சிறிலங்கப் படையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தி இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் சிறிலங்க அரசிற்கு ஆஸ்ட்ரேலிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்துப், பிற்பகல் தமிழ் அமைப்புக்கள் ஒன்றியத்தின் மூவர் குழு ஆஸ்ட்ரேலியாவிற்கான இந்திய தூதரின் தனிச் செயலர் ஹரி பிரசாத்தை சந்தித்து, வன்னி நிலவரம் குறித்து விளக்கியதுடன், சிறிலங்கா அரசிற்கு ராணுவ ரீதியில் இந்தியா நேரடி உதவிகளை வழங்குவது குறித்து கவலை தெரிவித்தனர்.
மேலும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான மனு ஒன்றையும் ஹரி பிரசாத்திடம் பிரதிநிதிகள் குழு அளித்தது.
இதற்கு ஹரி பிரசாத், அன்று இரவே மனுவை இந்திய பிரதமரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து அவரின் பதிலை கேட்டு சொல்வதாக உறுதியளித்தார்.