தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப்படுமானால், வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பெரும்பாலான பகுதிகளுக்குத் தேவையான எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்குள்ள ஒரே வழியான பாரசீக வளைகுடாவில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்வோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
"ஈரான் மீது போர் தொடுக்க முயற்சிக்கப்பட்டால், இஸ்லாமிய புரட்சிகரக் காவல் கடற்படையின் (IRGCN) ஏவுகணைகளைச் சந்திக்காமல் எந்தக் கப்பலாலும் பாரசீக வளைகுடாவைக் கடந்து செல்ல முடியாது." என்று ஈரானின் மூத்த ராணுவ ஆலோசகர் மேஜர் ஜெனரல் யஹ்யா ரகீம் சஃபாவி எச்சரித்துள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
IRGCN அமைப்பின் முன்னாள் கமாண்டரான சஃபாவி, பாரசீக வளைகுடா பகுதி பாதுகாப்பு பொறுப்பு முழுவதும் IRGCN படையிடம் வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மிகப் பெரிய கடற்படைகளுடன்கூட மோதும் வல்லமை IRGCN அமைப்பிற்கு உள்ளது என்று அமெரிக்கா ஆய்வு நிறுவனம் ஒன்று அண்மையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.