மலேசியாவில் பிரதமர் அப்துல்லா படாவி தலைமையிலான அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு ஆதரவாத அந்நாட்டு நாடாளுமன்றத்தை சேர்ந்த 31 எம்.பி.க்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
படாவி அரசைக் கவிழ்க்கத் தேவையான பெரும்பான்மையை விடக் கூடுதலாக 31 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அன்வர், ஆட்சியை இழப்பதற்கு பதிலாக படாவி தம்மிடம் பேச்சு நடத்தினால் அரசியல் குழப்பமின்றி எளிதாக ஆட்சி அதிகாரம் கைமாறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனக்கு ஆதரவாக செயல்படும் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரை அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிடவில்லை.
ஆனால் அன்வரின் ஆட்சியைப் பிடிக்கும் திட்டம் கானல்நீர் போன்றது எனக் குறிப்பிட்ட பிரதமர் படாவி, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கவும், போலி விளம்பரம் தேடிக் கொள்ளவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை அன்வர் கூறி வருகிறார் என்றார்.