புதுடெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, வரும் 25ஆம் தேதி அதிபர் ஜார்ஜ் புஷ்-பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பின் போது பயங்கரவாத ஒழிப்பு குறித்த பேச்சுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை பத்திரிகைப் பிரிவு செயலர் டானா பெரினோ கூறுகையில், கடந்த வார இறுதியில் டெல்லி மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள் தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பயங்கரவாதத்தையும், தீவிரவாத நடவடிக்கைகளையும் ஒழிப்பதில் இந்திய மக்களுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் மன்மோகன்சிங் உடன் பேச்சு நடத்தும் புஷ், புதுடெல்லி தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத ஒழிப்பு குறித்தும் பேசுவாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிச்சயமாக பேசுவார் என பெரினோ உறுதிபடத் தெரிவித்தார்.
அதிபர் புஷ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து வரும் 25ஆம் தேதி அமெரிக்காவுக்கு செல்லும் மன்மோகன் சிங், இரு நாடுகளுக்கு இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளார். எனினும் அதற்குள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி அளித்துவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் துவங்க உள்ள ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பிரதமர், அதனை முடித்த பின்னர் அமெரிக்காவுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.