பாகிஸ்தானின் வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து கடந்த ஜூலை மாதம் கடத்திச் சென்ற 38 பாதுகாப்பு படை வீரர்களில் 25 பேரை தலிபான் தீவிரவாதிகள் விடுவித்தனர்.
இது தொடர்பாக தலிபான் இயக்க செய்திதொடர்பாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக கடத்திச் செல்லப்பட்ட இந்த 25 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கு வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை. மீதமுள்ள 13 பேரையும் விரைவில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
காபால் என்னுமிடத்தில் உள்ள டியோலை காவல் துறை சோதனை சாவடியில் இருந்து கடந்த ஜூலை 29ஆம் தேதி 9 காவல் துறையினர், எல்லைப்புற காவலர்கள் 25 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இதே போல் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்வாட் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் இருந்து 4 காவல் துறையினரை தலிபான்கள் கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.