இந்தியாவின் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையைத் தீர்க்கவும், அதே நேரத்தில் உலக அளவில் அணு ஆயுத பரவல் தடுப்பை உறுதிப்படுத்தவுமே இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு செய்துகொண்டுள்ளது என்று அந்நாட்டு அயலுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவுடன் மேற்கொள்ளவிருக்கும் அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த முக்கிய அடிப்படைகளை விளக்கி அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்கள் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ள அந்த அறிக்கை, “இந்த ஒத்துழைப்பு, இந்தியாவுடன் ஒரு இராணுவ ரீதியான கூட்டாண்மையின் மூலம் அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கை (என்பிடி)யின் நோக்கங்களைப் பலப்படுத்தவும், அணு ஆயுத பரவலைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படுகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஹென்றி ஹைட் சட்டமே அடிப்படை!
“இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்ட ஹென்றி ஹைட் சட்டத்தின் அடிப்படையில் 123 ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள அந்த அறிக்கை, “அடிப்படையில் மற்ற எரிசக்தி ஒத்துழைப்பு போன்றதே அமைதி வழியிலான இந்த அணு சக்தி ஒத்துழைப்பும்... இப்படிப்பட்ட ஒத்துழைப்பு அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கைக்கு உட்படாத நாடுகளுடனும் செய்துகொள்ள அந்த உடன்படிக்கை அனுமதிக்கிறது. அதற்கான ஒரே அடிப்படை, அந்த நாடுகள் முழுமையான (ஐ.ஏ.இ.ஏ.யின்) பாதுகாப்பு கண்காணிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே” என்று கூறியுள்ளது.
“அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக கடைபிடித்துவரும் தன்னிச்சையான சுய கட்டுப்பாட்டை தொடர்வது என்று இந்தியா உறுதியளித்துள்ளது என்பது மட்டுமின்றி, அணு ஆயுத குவிப்பைத் தடுக்க, அணு வெடிபொருள் தயாரிப்பு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை (Fissile Material Cut Off Treaty - FMCT) உருவாக்க அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச சமூகத்தின் நீ்ண்ட நாள் நோக்கத்தை நிறைவேற்ற இந்த உறுதியளித்துள்ளது. இந்தியாவின் இந்த உறுதிப்பாடு, அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பாக நீண்ட நாட்களாக அது கடைபிடித்துவந்த நிலையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாகும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை எந்த அடிப்படையில் அமெரிக்க அரசு மேற்கொள்கிறது என்பதையும், அது அடிப்படையில் அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையின் நோக்கங்களுக்கு உட்பட்டே அமெரிக்க அரசு மேற்கொள்கிறது என்பதையும் இந்த அறிக்கை விளக்கியுள்ளது.