இந்தியா-அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு இம்மாத இறுதிக்குள் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து ஆலோசனை செய்த அமர்சிங் பின்னர் தெரிவிக்கையில், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தடையாக இருக்கமாட்டார்கள் என்று ஹிலாரி கிளிண்டன் உறுதியளித்ததாக கூறினார்.
குடியரசுக் கட்சிகள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளதால், இந்த 123 ஒப்பந்தத்துக்கு இம்மாத இறுதிக்குள் அனுமதி கிடைத்து விடும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மற்ற அரசியல் கட்சிகளை குற்றம் சாற்றிய அவர், ஒப்பந்தத்தின் மூலம் எரிசக்தி துறையில் நாடு தன்னிறைவை பெறும் என்றார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆதரவு அளித்ததை அப்போது அவர் சுட்டிக் காட்டினார்.