பாகிஸ்தான் மண்ணில் மக்களை கொன்று குவிப்பதை அமெரிக்க படைகள் தவிர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி அஸ்பாஃக் பர்வேஸ் கியானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் பாகிஸ்தானின் பழங்குடியின கிராமங்களில் அமெரிக்கா தொடர்ச்சியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பலியாயினர்.
இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்த ஒரு அயல்நாட்டு படைகளும் பாகிஸ்தானுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமது முக்தாரும் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் தீவிரவாதத்துக்கான ஒத்துழைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.