வன்னியில் சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான், தரைவழித் தாக்குதல்களில் காயமடைந்த இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்கள் இருவருக்கு சிறிலங்கத் தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வவுனியா மாவட்டத்தில் வன்னிப் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக சிறிலங்கா படையினர் அமைத்திருந்த கூட்டுத் தலைமையகத்தின் மீது நேற்று முன்தினம் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான், தரைவழித் தாக்குதல்களில், சிறிலங்கா வான்படையின் ராடார் பிரிவில் பணி புரிந்த ஏ.கே.தாகூர், சிந்தாமணி ராவுட் ஆகிய இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்புவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கடந்த 2005 இல் இந்திய அரசு சிறிலங்கா அரசிற்கு இந்த ராடார் கருவிகளை இலவசமாக வழங்கியது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தங்களது முதலாவது சோதனையை நடத்தியதையடுத்து, இந்த ராடார்களின் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
வவுனியா முகாமில் இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியுள்ளதை உறுதி செய்துள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராடார் கருவியைப் பராமரிப்பதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சிறிலங்காவிற்கு வந்து சென்றனர்." என்றார்.
இருந்தாலும், வவுனியா முகாமில் அயல்நாட்டவர் யாரும் பணியாற்றவில்லை என்று சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ராம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.