ஜப்பானில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஜப்பானின் கிழக்கு கடற்கரை தீவான ஹக்கிடோவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.21 மணியளவில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 35 நிமிடங்களுக்குப் பிறகு 10 செ.மீ. உயரத்தில் ஆழிப்பேரலை (சுனாமி) உண்டானது.
ஹக்கிடோ தீவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஜப்பானின் முக்கியத் தீவான ஹொன்சூத் தீவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் 50 செ.மீ. உயரம் வரை ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.