வடக்கு ஈரானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6 ஆகப் பதிவானது என்று ஈரான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது.
நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்தர் அப்பாஸ் பகுதி முக்கியத் துறைமுக நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏராளமான எண்ணெய்க் கிணறுகளும் சுத்திகரிப்பு ஆலைகளும் உள்ளன.
முதலில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்குப் பிறகு 4.7 ரிக்டர் மற்றும் அதைவிடக் குறைவான அளவுகளில் பத்திற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அதிர்வுகள் குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.