அதிபர் புஷ் பதவிக் காலம் முடிவதற்குள், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் பேச்சாளர் சீன் மெக்கார்மக், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை இந்த ஆண்டுக்குள் பெற்று விட முடியும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை புஷ் அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக இன்னும் 2 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக காண்டலீசா ரைஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த ஆவணங்களை தயாரிக்கும் பணியில் இந்தியாவும் தேவையான ஒத்துழைப்பை அளித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதியளிக்க வேண்டுமென்றால், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி) மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு குழு (எம்.டி.சி.ஆர்) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளை இந்தியா பின்பற்றும் என்று புஷ் அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.