பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத் துறை அளித்த தகவலையடுத்து தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட மாகாண தலைநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடமேற்கு நகரமான நவ்ஷெரா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையின் போது பழங்குடியினப் பகுதியில் தற்காலிகமாக சண்டை நிறுத்தம் செய்ய அரசு அறிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்க கலகக்காரர்கள் முயன்றால் அடக்குமுறையை பயன்படுத்த பாதுகாப்பு படைகள் தயங்காது என்றும் அவர் கூறினார்.
தற்காலிக சண்டை நிறுத்தத்தை சீர் குலைக்கும் வகையில், பாஜோர் பழங்குடியினப் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் குண்டு வைத்து தகர்க்க முயன்றனர். தீவிரவாதிகளின் இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
சட்டத்தை தங்கள் கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க முடியாது. தீவிரவாதத்தை வேறோடு களைய இந்த அரசு உறுதிப்பூண்டுள்ளது என்று கூறினார்.