இலங்கையில் வவுனியாவிலுள்ள சிறிலங்க இராணுவ படைத்தளம் மீது இன்று அதிகாலை தாங்கள் நடத்திய விமான, தரைப்படைத் தாக்குதலில் இரண்டு ராடார்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இத்தளத்தின் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய விமானங்களில் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாக சிறிலங்க அரசு கூறியிருப்பதை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், தாக்குதல் நடத்திய இரண்டு விமானங்களும் பத்திரமாக தளத்திற்கு திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
முதலில் தங்களுடைய பீரங்கிப் படையினர் சிறிலங்க இராணுவத் தளத்தின் மீது எரிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பிறகு தங்களுடைய விமானப் படையினர் நான்கு குண்டுகளை வீசியதாகவும், அதன்பிறகு அதிகாலை 3.05 மணிக்கு தளத்திற்குள் நுழைந்த கரும்புலிப் படையினர் ராடார்களை குண்டுகள் வீசி முற்றாக அழித்துவிட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
இத்தாக்குதலில் சிறிலங்கப் படையினரின் வெடிப் பொருள் களஞ்சியங்களும், தொலைத்தொடர்பு கோபுரமும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும் அழிக்கப்பட்டதாக கூறியுள்ள புலிகள், இத்தாக்குதலை மேற்கொண்ட கரும்புலிப் படையினர் 10 பேரும் மாண்டதாக கூறியுள்ளது.
சிறிலங்கப் படையினர் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் படுகாயமுற்றதாகவும் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.