பாகிஸ்தானில் மக்கள் கட்சித் தலைமையிலான அரசில் மீண்டும் இணையுமாறு அக்கட்சியின் இணைத் தலைவரும், இன்று அதிபராக பதவியேற்க இருப்பவருமான ஆசிஃப் அலி ஜர்தாரி விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப் நிராகரித்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு ஆரோக்கியமான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று நவாஸ் உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த அதிபர் தேரிதலில் ஜர்தாரி அமோக வெற்றி பெற்றார். இதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற நவாஸ் ஷெரீஃப்பிடம் மீண்டும் கூட்டணியில் இணையுமாறு சர்தாரி கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதில் அளித்த நவாஸ் ஷெரீஃப் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு ஆரோக்கியமான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறினார்.
பாகிஸ்தானில், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் நியமிப்பது, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஜர்தாரி நிறைவேற்ற தவறிவிட்டதாக குற்றம் சாற்றி ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.