பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டின் அதிபராக இன்று முறைப்படி பதவியேற்கிறார்.
அந்நாட்டு அதிபர் மாளிகையில் இன்று நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி அப்துல் ஹமீது தோகர், ஜர்தாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா முடிந்ததும் ஜர்தாரிக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பின்னர் அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கிறார் என அதிபர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில், பயங்கரவாதத்தை ஒழிப்பது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்த புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அவர் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
பதவியேற்பு விழாவில் ஜர்தாரி-பெனாசிரின் மகனும், பி.பி.பி கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று தனது மகள்கள் மற்றும் நெருக்கமான உதவியாளர்களுடன் அதிபர் மாளிகைக்கு வந்த ஜர்தாரி, மதச் சடங்குகளை நடத்திய பின்னர் அங்கு முறைப்படி குடியேறினார்.