Publish Date: Mon, 08 Sep 2008 (15:09 IST)
Updated Date: Mon, 08 Sep 2008 (15:08 IST)
பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் இன்று அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
டான்டா டார்பகேல் என்னுமிடத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான படையினர் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இந்தப் பகுதியில் மூத்த தலீபான் இயக்க தலைவர் ஹக்கானியின் வீடும், முஸ்லீம் கல்லூரியும் உள்ளது. எனினும் அவர்களை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் பைதுல்லா மசூத் தலைமையிலான பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால், அப்பகுதியில் தொடர்ந்து இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.