அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (என்.பி.டி-NPT) கையெழுத்திடும் வரை இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடியாது என ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வணிக அமைச்சர் சிமன் கிரியன் ஆஸ்ட்ரேலிய நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், என்.பி.டி-யில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்ட்ரேலியா யுரேனியம் வழங்கும் என்பதே ஆளும் தொழிலாளர் கட்சியின் கொள்கை. இதன் காரணமாக என்.பி.டி-யில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி (பெடரல் கட்சி) ஆஸ்ட்ரேலிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அடுத்த வாரம் இந்தியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்லும் அயலுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இருநாடுகளுக்கு இடையே புதிய யுரேனிய வணிகக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெடரல் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ராப் கூறுகையில், பசுமைக்குடில் வாயுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அணு சக்தி தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஆஸ்ட்ரேலிய அரசு துணைபுரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.