பாகிஸ்தானை ஆளும் பி.பி.பி கூட்டணியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஆசிப் அலி ஜர்தாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரையும் விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் பதவியில் இருந்து பர்வேஷ் முஷாரஃப் விலகியதைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டில் இன்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில், 4 மாகாண சபைகள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றிலும், நாடாளுமன்றத்திலும் இரு சபைகளிலும் கூட்டாக இன்று நடந்த வாக்குப்பதிவை அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் முஹம்மது பரூக் மேற்பார்வையிட்டார்.
மாலை 3.45 மணியளவில் பி.பி.பி. கட்சியின் இணை தலைவரும், அதிபர் வேட்பாளருமான ஆசிப் அலி ஜர்தாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பதிவான வாக்குகளில் 426 வாக்குகளில் செல்லத்தக்கவை என்றும், இதில் ஜர்தாரி 281 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் முஹம்மது பரூக் அறிவித்தார்.
நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி சயீத்-சமன் சித்திக், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) சார்பில் முஷாஹித் ஹுசைன் சையத் ஆகியோர் ஜர்தாரியை எதிர்த்துப் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தகக்து.