அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள முழு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பதற்கு 6 ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு காட்டி வருவதால், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு ((Nuclear Suppliers Group - NSG) கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதனால் இரண்டு நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுக் கூட்டப்பட்ட என்.எஸ்.ஜி. கூட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மான வரைவில், அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியாவை கையெழுத்திடச் செய்யும் வகையில் புதிய திருத்தங்களைச் செய்தாக வேண்டும் என்று நியூ ஸீலாந்து, ஆஸ்ட்ரியா, நெதர்லாந்து, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய 6 நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில உறுதிமொழிகளை அதிருப்தியில் உள்ள என்.எஸ்.ஜி. நாடுகள் சில வரவேற்றாலும், இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பதை எதிர்த்துள்ளதால், நேற்று நடந்த என்.எஸ்.ஜி. கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
குறிப்பாக, "அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றுவோம்" என்று உறுதிமொழி அளித்துள்ள இந்தியா, ஏன் அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடக் கூடாது என்று அதிருப்தியில் உள்ள என்.எஸ்.ஜி. நாடுகள் கேள்வி எழுப்பியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக நடந்த 4 சுற்றுப் பேச்சுக்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், கூட்டம் இன்றும் தொடர்ந்து நடக்கவுள்ளது. இன்று மதியம் இந்திய நேரப்படி 2.30 மணிக்குத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் பேச்சில் இந்தியாவிற்குச் சாதகமான முடிவு எட்டப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.