தீவிரவாதத்துக்கு எதிரான போருக்காக வழங்கப்படும் அமெரிக்காவின் நிதியை பாகிஸ்தான் அரசு தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக போருக்கு தன்னை தயார் படுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமா குற்றம் சாற்றியுள்ளார்.
வாஷிங்டனில் பாஃக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பழங்குடியின பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படும் என்றார்.
தீவிரவாதத்துக்கு எதிரான போருக்காக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அதிக அளவு நிதி அளித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு அந்த நிதியை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக போருக்கு தன்னை தயார் படுத்தி வருகிறது என்று குற்றம் சாற்றியுள்ளார்.
தீவிரவாதிகளை விரட்டியடிக்க முஷாரஃப் அரசுக்கு அளித்த 10 பில்லியன் டாலர் உதவித் தொகையும் வீணாகப் போய்விட்டது என்றும் ஒபாமா கூறியுள்ளார்.