அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்டுள்ள சுயக் கட்டுப்பாட்டை (Unilateral Moratorium) முழுமையாகப் பின்பற்றுவோம் என இந்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறுவதற்கு நடத்தப்பட்டு வரும் என்.எஸ்.ஜி (NSG) உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் வுட், என்.எஸ்.ஜி. உறுப்பினர்கள் இந்தியாவின் அறிக்கையை வரவேற்றுள்ளதாகவும், இப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் இது முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என தாங்கள் கருத்துவதாகவும் கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக பல நாடுகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவும், அமெரிக்காவும் தங்களின் நிலைகளை வெளிப்படுத்திய கட்டத்தில், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்கள் நாட்டின் நிலையை நேற்றைய அறிக்கை மூலம் உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ராபர்ட் வுட் தெரிவித்தார்.
அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதிலும், எந்தச் சூழலிலும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றுவோம் என்றும் உறுதிபடுத்தியிருந்தார்.
அணு ஆயுதப் போட்டி உள்ளிட்ட எந்தவிதமான ஆயுதப் போட்டியிலும் பங்கேற்க மாட்டோம். அணு எரிபொருள் செறிவூட்டல், பயன்படுத்தப்பட்ட எரிபொருளைமறு சுழற்சி செய்தல் ஆகிய தொழில்நுட்பங்களை அணு ஆயுத தொழில்நுட்பம் பெறாத நாடுகளுக்கு அளிக்கும் நாடாக இந்தியா இருக்காது என்று உலக நாடுகளுக்கு உறுதியளிக்கிறோம் என்றும் பிரணாப் நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.