பாகிஸ்தானில் இன்று காலை அதிபர் தேர்தல் தொடங்கியது. இத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
பாகிஸ்தானில் அதிபர் பதவி வகித்து வந்த பர்வேஸ் முஷாரஃப் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர் 6ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அதன் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி போட்டியிடுகிறார்.
முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சையது-உஸ்-ஸமான் சித்திக், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) கட்சி சார்பில் அதன் பொதுச் செயலர் முஷாகித் ஹுசைன் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள், செனட், தேசிய அவை மற்றும் 4 மாகாண பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
இந்த மும்முனைப் போட்டியில் சர்தாரிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. சர்தாரிக்கு அவாமி தேசிய கட்சி, ஜமியத் உலமா-இ-இஸ்லாம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் முஸ்லீம் லீக் (கான்) கட்சியின் அதிருப்தியாளர்களின் ஆதரவும் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.