பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் இன்று நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் காயமடைந்தனர்.
வடக்கு வசிரிஸ்தானில், கோர்வக் என்னுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் மூன்று ஏவுகணைகள் விழுந்து தாக்கியது. இதில் 3 குழந்தைகள் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். கடந்த ஒரு வாரத்துக்குள் இந்தப் பகுதியில் இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவது இது நான்காவது முறையாகும்.
வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்த 4 ஏவுகணைத் தாக்குதலில் மொத்தம் 18 பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இதே போல், கடந்த புதன் கிழமை தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் நடத்திய ஹெலிகாப்டர் வழி தேடுதல் வேட்டை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பாராளுமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் இது போன்ற வன்முறைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்று கூறியுள்ளது.
இது போன்ற தாக்குதல்கள் தீவிரவாத்துக்கு எதிரான போரின் ஒத்துழைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.