Publish Date: Fri, 05 Sep 2008 (13:51 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (23:11 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் சிறிலங்க சிறப்பு அதிரடிப் படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள முகாமிற்குச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினரின் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில், 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் இணைய தளம் கூறுகிறது.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அதிரடிப் படையைச் சேர்ந்த உயரதிகாரி என்று தெரிய வருவதாகவும், அவரை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கொழும்புவிற்கு உடடியாகப் படைத்தரப்பு கொண்டு சென்றுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதேபோல, கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.