அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டுள்ள வரைவில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்றும், அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியாவை கையெழுத்திடச் செய்யும் வகையில் புதிய நிபந்தனைகள் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அணு சக்தி தொழில்நுட்ப நாடுகள் குழுவின் (Nuclear Suppliers Group - NSG) சில உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா சார்பில் அமெரிக்கா முன்மொழியப்பட்டுள்ள தீர்மான வரைவின் மீது கடந்த மாதம் 21- 22 தேதிகளில் என்.எஸ்.ஜி. கூட்டத்தில் விவாதம் நடந்த போது, பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தியதற்கு இணங்க, அந்த வரைவில் சில திருத்தங்களை இந்தியாவுடன் கலந்தாலோசித்து அமெரிக்கா செய்தது.
இந்நிலையில், திருத்தப்பட்ட வரைவின் மீது விவாதம் நடத்தி அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக என்.எஸ்.ஜி. கூட்டம் இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
இன்றைய கூட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்ட்ரியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள், வரைவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்று கூறியுள்ளதுடன், முக்கியமான கேள்விகள் பலவற்றிற்குக் கண்டிப்பாக பதிலளித்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
பன்னாட்டு அளவில் மேற்கொள்ளப்படும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு உதவும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்தியாவை அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) கையெழுத்திடச் செய்யும் வகையில் அந்தத் திருத்தங்கள் இருக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையில், "பன்னாட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்பின் தரத்தை உயர்த்தும் வகையில் என்.எஸ்.ஜி.முன்பு வைக்கப்பட்டுள்ள வரைவில் இன்னும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது" என்று அதிருப்தியில் உள்ள நாடு ஒன்றின் பிரதிநிதி தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
விலக்கு கிடைப்பதில் சிக்கல்!
இதற்கிடையில் பன்னாட்டு அளவில் அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபடுவதற்கு வழி ஏற்படுத்தித் தரும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள வரைவிற்கு என்.எஸ்.ஜி.ஒப்புதல் வழங்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருந்தாலும், அது கடினம் என்பதை உறுதி செய்யும் வகையில், இன்று நடந்த கூட்டத்தில் அதிருப்தியில் உள்ள நாடுகளிடையில் கருத்துக்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன என்று மட்டும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"நாங்கள் இந்தியாவின் எரிசக்தித் தேவையை அங்கீகரிக்கிறோம், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறோம். ஆனால், சர்வதேச அளவில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு கட்டமைப்பிற்குப் பலனளிக்கும் வகையில் முடிவுகளை எட்ட வேண்டிய கட்டாயம் எங்களுக்குத் தேவைப்படுகிறது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கை அந்தக் கட்டமைப்பின் முக்கியத் தூண் ஆகும். இதற்குச் சாதகமாக ஒரு உடன்பாட்டிற்கு நாம் வருவது அனைவருக்கும் நல்லது" என்று அதிருப்தி நாடுகள் கூறியுள்ளன.
அமெரிக்கா நம்பிக்கை!
என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இதுவரை நடந்துள்ள விவாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா, இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதிகளுக்குத் தலைமை வகித்துள்ள வில்லியம் பர்ன்ஸ், "இன்னும் சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது" என்றார்.
அணு சக்தி தொழில்நுட்பத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைப்பட்டுள்ள இந்தியாவை அதிலிருந்து மீட்பதற்கு அளப்பறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.