பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியைக் கொல்வதற்காக மர்ம ஆள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அலுவல் காரணமாக ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா விமானத் தளத்திற்குச் சென்றுவிட்டு, பலத்த பாதுகாப்போடு தலைநகர் இஸ்லாமாபாத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த பிரதமர் யூசுப் ரசா கிலானியின் வாகன அணிவகுப்பின் மீது மர்ம ஆள் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளான்.
இதில் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் அவருடன் வந்தவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலையில் மறைவான இடத்தில் இருந்து மர்ம ஆள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரண்டு குண்டுகள் பிரதமரின் குண்டு துளைக்காத காரின் மீது பட்டதாகவும், இதில் ஓட்டுநர் அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.